பழிவாங்கும் நாளைக் குறி


எருதுகளை ஓட்டிவந்து
ஏர்க்கலப்பை பூட்டிவந்து
கழனிக்காடு உழுதாலும்
கதிர்நெல்லு அறுத்தாலும்

உழக்கு நெல்லு உருப்படியாய்
வரவில்லை வீடு – அட
உடல் வளைந்தும்தான் நமக்கு
உடுக்கத் துணி ஏது?

விதைத்ததுதான் விளைந்தாலும்
விளைந்ததெல்லாம் அறுத்தாலும்
கழுதைபோல பிழைப்பாகிப்போச்சு
கால்வயிறே பசியாறலாச்சு

கையும்காலும் உழைத்தாலும்
கிடைக்கவில்லை சோறு – பல
காணி நிலம் விளைந்தாலும்
திருடுவது யாரு?

எஃகையும் இரும்படித்தோம்
இயந்திரமும் பல பிடித்தோம்
அந்தரத்தில் ஆடித் தொங்கி
ஆயிரம் பொருட்கள் செய்தும்

தருத்திரப்பேய் தினம் பிடித்து
தாக்குதடா நம்மை – புகை
தணல்தணிந்த அடுப்பினிலே
தூங்குதடா பூனை.

தெய்வத்தைத் தொழுதேற்றி
திருப்புகழைப் படித்தாலும்
கருவரைக்குள் நுழைந்து நின்றால்
கன்னித்தமிழ் தீட்டென்று

சாமிவந்து நம் வாழ்வில்
சபித்துவிட்ட சாபம் – அதை
கும்பிட்டுப் பார்த்தும் நமக்கு
கொடுத்ததென்ன லாபம்?

சொட்டும் வியர்வை கரிக்க
சூரியனும் சுட்டெரிக்க
பகலெல்லாம் உழைத்த பணம்
பசியாறப் போதவில்லை

கூலி வாங்கியும் குடும்பம்
கும்பி காயும் சோகம் – ஒரு
போக்கிடமும் தெரியாமல்
பொங்கிவரும் கோபம்

குருதியெல்லாம் கொப்புளிக்க
கோபத்தில் கொந்தளிக்க
காய்ந்துபோன வயிறெல்லாம்
காரணங்கள் கேட்டுவிட

தினவெடுக்கும் தோட்களெல்லாம்
தேடுதடா ஆளை – அவன்
குலையறுக்க தலையறுக்க
குறிக்குதடா நாளை!

Advertisements

எருமைஇந்த இடத்தில் எருமை மாடுகள் சாலையைக் கடந்தால், மணி சரியாக எட்டரை என்று கடிகாரத்தை திருப்பி வைத்துக்கொள்ளலாம். நான் அலுவலகம் போகும் நேரமாகப் பார்த்துத்தான் ஒரு நாளும் தவறாமல் இந்த மாடுகள் சாலையைக் கடக்கும். காரின் பின் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, பல்லை நறநறத்து, முஷ்டியால் காரின் சீட்டில் ஓங்கிக் குத்தி, கோபத்தைக்காட்டுவேன்.

இன்றும் அதே மாடுகள், எத்தனை மெதுவாக போகவேண்டுமோ அத்தனை மெதுவாக, ஆடி அசைந்தாடி, அசை போட்டு, சில கழுத்துகளில் டிங் டிங் மணியொலியோடு, கன்றுக்குக் குட்டிகளின் தடுமாறும் குடிகாரனின் நடையோடு, பின்னால் ‘ஹேய், தேய், ஓடு… ஓடு…’ என்று கூப்பாடு போட்டபடி ஒரு கிழவன் தொடர்ந்து வர, சாலையைக் கடந்துகொண்டிருந்தன. காரின் ஹாரன் ஒலித்துக்கொண்டேயிருந்தும், ஒரு எருமை, காரின் பம்பரை உரசியபடி, அது தண்ணீராய்க் கழிந்த சாணியை அதன் வாலால் முன் கண்ணாடியில் விசிறி அடித்தது. என்னை தினந்தோறும் வந்து கூட்டிச் செல்லும் அலுவலகத்துக்கான வாடகைக் கார் அது. வண்டியிலிருந்து டிரைவர் இறங்கிப் பார்த்தபோது, ஆயுதபூஜைக்கு சந்தனம் அப்பியது போல இருந்தது.

“நேத்துதான் சார் வாட்டர் வாஷ் பண்ணினேன். வண்டியே நாசமாப் போச்சு. கொஞ்சம் இறங்கிக்கங்க சார். தொடைச்சிட்டு கொண்டுபோகலாம். அப்படியேவும் ஓட்டமுடியாது. விஷன் மறைக்கும்” என்று டென்ஷனான குரலில் என்னிடம் சொன்னான் கேசவன்.

“பத்து மணிக்கு எம்டி வர்றார்யா. சீக்கிரம் ஆகட்டும். என்னதிது…? தெனத்துக்கும் இங்க பெரும் பாடாய்ப்போகுது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, இடது கை மணிக்கட்டில் சாப்பாட்டுத் தூக்கை மாட்டிக்கொண்டு, வலக்கையில் மூங்கில் குச்சியுடன் அந்த பெரியவர் என்னைக் கடந்து சென்றார். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் துண்டால் இறுக்கிய தலைக்கட்டு. ஒரு எழுபது வயதுக்கான உடல். ஆனால் தளர்ந்துவிடாத தசைகள் அவரின் உழைப்பால் இறுகியிருந்தது.

பின்னால் நின்ற வாகன ஓட்டிகளெல்லாம் சகட்டு மேனிக்கு அவரைத் திட்ட ஆரம்பித்தார்கள். எனக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான் அவரைக் கோபமாகக் கத்திக் கூப்பிட்டேன்.

“யோவ் பெரியவரே, என்னையா இது, தெனத்தன்னிக்கும் இதே தொந்தரவாப்போச்சு. போதாக் குறைக்கு, இன்னைக்கு உன் மாட்டை விட்டு, காருக்கு சந்தனம் பூசிட்ட?! சே…!”

“அந்த மூதி ஏதோ மைக்கா கவர தின்னுட்டு பீசுதுங்க. நாளைக்கு சரியாப் போகும்” என்று சொல்லி விட்டு மேலும் நடக்கப் பார்த்தார்.

“ஏன்யா இந்த ஆபீசு நேரத்துல கழுத்தறுக்கற? வேற நேரமாப் பார்த்து ஓட்டிக்கிட்டுப் போகவேண்டியதுதானே?”

இன்னொருத்தர் கேட்டார் : “இந்த ரோடைக் கிராஸ் பண்ணிப்போய்த்தான் மாடு மேய்க்கணுமா, உனக்கு அறிவே கிடையாதாய்யா?”

இன்னொருத்தர் : “மூஞ்சியப் பாத்தியா அந்தாளுக்கு. இவரோட இன்னோவா காரை நாசனம் பண்ணிட்டான். யோவ், மாடுங்கள வச்சிக்கிட்டு இந்த ரோடக் கிராஸ் பண்ணக்கூடாது தெரியுமா? தூக்கி உள்ளப் போட்டுருவேன்.”

இப்பொழுது நின்று, அந்த ஆளை நெருங்கி வந்தார் அந்தப் பெரியவர்.

“என்ன சொன்ன? ஜெயில்ல போடுவியா? அறுபது வருஷமா இந்த வழியாத்தாண்டா மாடு போவுது; வருது. ரோடு இப்பப் போட்டது. இதுக்காக கவுருமெண்டு நெலம் எடுத்துட்டு, இன்னும் எங்க ஜெனங்களுக்கு காசுகூட கொடுக்காம ஏமாத்துது. எங்களோட நெலத்துல நின்னுக்கிட்டு, என்னத் தூக்கி உள்ளப் போடுவியா?” என்று சொல்லி பளார் என்று கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார்.

“ஓடிப்போய்டு. இதுக்குமேல பேசினா, வெட்டி பொலி போட்டுறுவேன்.” என்று திரும்பி மாடுகளை அதட்டிக்கொண்டே மெல்ல நகர்ந்தார்.

“நான் வக்கீல் சார். என்னையே அடிச்சுட்டான். யாராவது கேக்கக்கூடாதா?” என்று நியாயம் கேட்கத் தொடங்கியபோது ஒவ்வொருவராய் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றார்கள்.

என்னுடைய டிரைவர் கூட சற்று பீதியடைந்தாற்போல தோன்றியது. “ஆச்சு சார், போய்டலாம் வாங்க. நமக்கேன் வம்பு? அப்புறம் உள்ளூர் பிரச்சினையாயிடும். நீங்க வேற இந்த ஊர்லதானே இருக்கீங்க? ரொம்ப பேசிக்க வேண்டாம்.”

நான் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டு, காரில் ஏறப் போகும்போது, அந்த வக்கீல் என்னருகில் விரைவாக வந்தார். கன்னம் சிவந்துபோயிருந்தது.

“சார், கொஞ்சம் நில்லுங்க. என்ன சார், படிச்சவுங்க நீங்க. எல்லாத்தையும் கிட்டதிலேர்ந்து பார்த்துட்டு போய்ட்டே இருந்தா எப்படி? உங்களுக்காகத்தானே நான் இப்படிப் பேசினேன்?” என்று கலவரமான குரலில் கேட்டார். “இதுக்கு ஏதாவது செய்தாகணும். எவ்வளவு திமிரு இருந்தா, ஒரு மாடு மேய்க்கிற நாயி என்னை கை நீட்டி அடிக்கும்? உள்ளூர்க்காரன்னு நெனைப்பு. கூப்பிட்டா பத்துபேர் வந்துருவாங்கன்ற தைரியம். அதான் கை நீட்டுது. பெரியவராச்சே, பொட்டுனு போயிடுமேன்னு திருப்பியடிக்கவும் பயமா இருக்கு. ரொம்ப அசிங்கமாப் போச்சு சார்” என்று பரிதாபக் குரலில் என்னைப் பார்த்தார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் முகத்தைத் திருப்பிகொண்டு, “கேசவா, போப்பா, டைம் ஆயிடுத்து” என்று கதவை சாத்திக்கொண்டேன். சற்று தொலைவு சென்றதும் பின் பக்கம் திரும்பிப் பார்த்தபோது, அந்த வக்கீல் மட்டும் தனிமையில் விடப்பட்டு, எங்களைக் காட்டி கையை நீட்டி நீட்டி ஏதேதோ கத்திக்கொண்டிருந்தார்.

***

இந்த இடம் நகரத்து அடர்த்தி குறைந்து, கிராமாய் தொடங்கும் பகுதி. நகரத்தில் கால் கிரவுண்டு கூட விற்பனைக்கில்லை என்னும் நிலவரமான பி
றகு, வீடு கட்ட இடம் வாங்கிப்போடும் இடமாகிப்போனது இந்த ஊர். நல்ல தண்ணீீர். காற்று. கிரவுண்டு முப்பது லட்சம். சாதாரண ஆள் வாங்க முடியாது. கையில் கருப்போ வெள்ளையோ, அல்லது லோன் எலிஜிபிளிடியோ இருக்கவேண்டும்.

இங்கேயும்கூட ஓரளவுக்கு வீடுகள் நிறையவே கட்டப்பட்டு குடி வந்தாயிற்று. அதிகபட்ச வீடுகள் கட்டுமானத்தில் இருந்தன. நிறைய அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள். சிலபேர் இரண்டு கிரவுண்டுகளாக இடம் வாங்கி, ஒரே ஒரு பங்களா வீடாகக் கட்டி குடிவந்திருக்கிறார்கள். அதுமாதிரி வீடுகளை நீங்கள் அண்ணா நகரிலோ அல்லது அபிராமபுரத்திலேயோ கூட பார்க்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த ஏரியாவை கார்ப்பரேஷனில் சேர்த்திருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக ‘ட்ரெய்னேஜ்’ வேலை கூட நடந்துகொண்டிருக்கிறது.

நான் இந்த ஏரியாவுக்கு குடி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. ஒரு அபார்ட்மெண்டில், நாலாவது மாடியில் டபுள் பெட் ரூம் வீடு. ஒரு அக்கவுண்டன்டின் ரொம்ப நாள் கனவு. தம்பிரான் புண்ணியத்துலே சிட்டிக்குள்ளே இல்லேன்னாலும், ஏதோ நகரத்தை ஒட்டியாவது கெடைச்சுதே. நாளைக்கு இதுவும் ஒரு சிட்டி ஆகிவிடாதா என்ன?

இந்த வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு கும்பகோணத்திலிருந்து வந்த எனது தாத்தா, கண்டதையும் தின்றுவிட்டு, பீயும் மூத்திரமுமாக, இங்கேயே படுத்த படுக்கையாகிவிட்டார். நிலைமை சீரியஸ் ஆகி இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு இந்தப் புத்தம் புதிய வீட்டில் ஏதும் நடக்கக் கூடாது என்று வேண்டாத தெய்வமில்லை. இதை அந்தக் கும்பகோணத்து அண்ணன் புரிந்து கொள்ளவேயில்லை. ‘புது வீடாவது மண்ணாங்கட்டியாவது? கிழவன் அங்கேயே கிடந்து சாகட்டும். எத்தனை நாள் நான் மட்டும் வைத்துக்கொண்டு மாரடிப்பது.’ என்பது என் அண்ணன்காரனின் வேண்டுதல். நான் அப்போது வாடகை வீட்டில் இருந்ததால், அவன்தான் இத்தனை ஆண்டுகளாய் எங்கள் தாத்தாவைப் பார்த்துக்கொண்டான். இனிமேல் முறை வைத்துவிடுவான். இங்கு ஆறு மாதம்; அங்கு ஆறு மாதம்.

‘நாராயணா, கிழவன் உயிர் இங்கே போகாமல் பார்த்துக்க’ என்று வேண்டாத நாளே இல்லை. ‘கும்பகோணம் பழைய வீடு; அங்கே போனால், ஊருக்கு கொண்டுபோகிற செலவும் மிச்சம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, என் மனைவி ஓடிவந்தாள்.

“அவருக்கு இழுக்குதுங்க. பயமாயிருக்கு.”

நான் ஓடிச் சென்று பார்த்தபோது கண்கள் குத்திட்டிருந்தன. பொக்கை வாய் மேலும் கீழுமாய் மென்றபடி இருந்தது. இதற்குள் அக்கம்பக்கதினர் வந்துவிட்டார்கள். அந்த அறையிலிருந்து வந்த நாற்றத்தால் யாரும் கிட்டத்தில் போகத் தயங்கினார்கள்.

“உயிர் போரதுக்கு முன்னாடி, யாராவது வாயிலே பால் ஊத்துங்க; இல்லைன்னா சக்கரத் தண்ணியாவது ஊத்துங்க,” என்று ஒரு பெண் பதற்றப்பட்டார்.

“நீ போடி, எனக்கு பயமாயிருக்கு” என்று என் மனைவியைத் தள்ளிவிட்டேன்.

“எனக்கென்ன தலையெழுத்தா? ஏன், வாரிப் போட்டதெல்லாம் பத்தாதா? இது வேறயா?” என்று எல்லோர் முன்னாலும் இரைந்து பேசி, தன் ஆதங்கத்தைக் காட்டினாள். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“நீங்க போங்க. பேரனாயிருந்துகிட்டு பயப்படறீங்க?” என்று என் காதருகே யாரோ சொன்னர்கள்.

நீண்ட தயக்கத்துக்குப் பிறது, ஒரு கிண்ணத்தில் சர்க்கரைத் தண்ணீரோடு கிட்டத்தில் போனபோது தாத்தா அசைவற்றுக் கிடந்தார். இறப்பதற்கு முன்னால் அந்தக் கட்டிலையே பீ மூத்திரத்தால் குழப்பிவிட்டிருந்தார். நாற்றம் சகிக்க முடியவில்லை.
இதற்குள்ளாக என் கையில் ஒரு தேங்காயும் கற்பூரமும் திணிக்கப்பட்டது. தேங்காய் உடைத்து தலைமாட்டில் வைப்பதற்குள் தலை கிறுகிறுத்து, வாந்தி குமட்டியது.

“மேல ஆகவேண்டியதப் பாருங்க,” என்று கூட்டம் கலைய ஆரம்பித்தது.

போன் ஒலித்து எடுத்த போது சி.இ ஏகத்துக்கு எகிறினார்.

“இப்பத்தான் கேசவன் விவரம் சொன்னான். என்னைய்யா நீ, ஒரு எம்என்சி சீஃப் அக்கவுண்டன்ட் மாதிரியாப் பேசுற? முப்பத்தாறு லட்சம் டிடி எடுத்து அனுப்பினாத்தான் கன்சைன்மென்ட் யு எஸ்லேருந்து வந்து சேரும். லாஸ்ட் டேட். கீழே கேசவன் நிக்கறான். கெளம்பிவா. மதியத்துக்கு மேல வீட்டுக்குப் போய்டுய்யா…”

“சார், சாவிய வேணும்னாகூட கேசவன்கிட்ட கொடுத்தனுப்புறேன். ரெண்டே நாள்ள, இத எடுத்துப்போட்டு, ஆபீஸ் வந்துடறேன் சார்.”

“இங்கப் பாருங்க. ஆபீஸ் ஃபார்மாலிடீஸ் எல்லாம் உங்களுக்குத்தான் தெரியும். ஒரு ஒருமணி நேரமாவது வந்து முடிச்சிக்கொடுத்துட்டு போயிடுங்க. அதுக்கு அப்புறம்வேணா, ஒரு நாலு நாள் கூட லீவு எடுத்துக்கங்க.” என்று சொல்லிவிட்டு போன் துண்டிக்கப்பட்டது.

என் மனைவி என்னை முறைத்தாள்.

“கும்பகோணத்து ஆளுங்களுக்கெல்லாம் போன் பண்ணி சொல்லிட்டு, இத இங்கிருந்து ஊருக்கு கொண்டுபோகப் பாருங்க. குழந்தைங்க வந்தா பயப்படும். ரொம்ப நேரம் வச்சிருக்ககூடாது. ஏற்கெனவே நாறுது”

“கொஞ்சம் கோவப்படாம கேளு. எனக்கு நேரமில்ல. நீயே போன் பண்ணி எல்லாருக்கும் சொல்லிடேன். கும்பகோணம் போக ஒரு வண்டியும் ஏற்பாடு பண்ணிடு. இதோ போய் உடனே வந்துடறேன். சி.இ ரொம்ப கத்துரான்.” என்று சொல்லிகொண்டே நான் கீழே இறங்கிப் போய்விட்டேன்.

***

போன வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு, நாலு நாள் லீவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மணி நான்கு ஆகிவிட்டது. வாசற்கதவை சாத்திக்கொண்டு, வெளியே வந்து என் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும், சட்டையை பிடிக்காத குறையாக என் மனைவி எழுந்து வந்தாள்.

“உள்ள இருக்க முடியலை. நாத்தம் குடலைப் பிடுங்குது. குழந்தைங்க வேற ரொம்பவும் பயப்படுதுங்க. உங்க அண்ணன், எப்படியாவது இங்க கொண்டுவந்துடுங்க என்று சொல்லிட்டு போனை வச்சுட்டார். ஆம்புலன்சுக்கு போன் செய்தா யாரும் அவ்வளவு தூரம் வரமாட்டேங்கராங்க.” என்று அழுதுகொண்டே சொன்னாள்.

“கொஞ்சம் இரு.” என்று சொல்லி கீழே எட்டிப் பார்த்தேன். கேசவன் திரும்பிச் செல்ல காரைத் திருப்பிக்கொண்டிருந்தான்.

“கேசவா, நில்லுப்பா. ஒரு உதவி செய்யணும். பிணத்தை இங்கிருந்து கும்பகோணம் கொண்டுபோக ஏதாவது வண்டி ஏற்பாடு செய்து தர முடியுமா?” என்று கேட்டேன்.

நீண்ட நேரம் யோசித்தான். பிறகு யாரிடமோ பேசினான்.

“சார், எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். பிணத்தை வைக்கிற பிரீசர் கடை வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டேன். ஒரு பழைய மகீந்திரா வண்டி இருக்காம். அதுல கொண்டு போகலாம்; ஆனா ஏத்த இறக்க நீங்கதான் பார்த்துக்கணும் அப்படீன்னு சொல்றார். என்ன சொல்ல?” என்று கேட்டு போனை லைனிலேயே வைத்திருந்தான்.

“பிரச்சினையே அதானேப்பா, நாலாவது மாடிலேருந்து கொண்டுவரணும். என்ன பண்றதுன்னு தெரியலை.” என்று தயங்கினேன்.

“சரி. வேண்டாம்னு சொல்லிடவா?”

“இல்ல, இல்ல, வரச்சொல்லு.” என்று பதற்றத்துடன் சொன்னேன்.

கேசவன் பேசிவிட்டு சொன்னான். “வேன் ஒரு மணி நேரத்துல வந்துடும். இருபதாயிரம் ரேட். குடுத்துடுங்க. வரட்டுமா?” என்று விவரம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

“இறக்கி ஏத்த ஆள் கெடைக்குமா?” என்று கேட்பதற்குள் கேசவனின் கார் கிளம்பிப்போயிருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து கேசவன் சொன்ன வேன் வந்தது. வண்டி ஓட்டிவந்த டிரைவர் லேசான தள்ளாட்டத்திலிருந்தான்.
வேன் டிரைவரும் மேலே வந்து பார்த்துவிட்டு, “என்னால இறக்கமுடியாதுங்க,” என்று கூறிவிட்டான்.

ஆறு மணிவரையிலும் என்னால் பிணத்தை கீழே இறக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப்பார்ட்மெண்ட் ஆட்களெல்லாம் கதவை மூடிவிட்டு உள்ளேயே கிடந்தார்கள்.

உதவிக்காக, தெருவையே வெறித்து உட்கார்ந்திருந்த நேரத்தில், தினமும் பால் ஊற்றும் பையன் சைக்கிளில் வந்தான். அவனாகவே மாடி ஏறி வேகமாக எங்களிடத்தில் வந்தான்.

“அடப்பாவமே, தாத்தா செத்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்.”

“ஆமாப்பா, அவர சொந்த ஊருக்கு கொண்டுபோகணும். வண்டி வந்திருச்சி…” என்று தயங்கினேன்.

“என்ன தயங்கறீங்க? வண்டியில ஏத்தணுமா?” என்று கதவை அவனே திறந்து உள்ளே போய் பார்த்தான்.

“ரொம்ப கலீஜா இருக்கே. கொஞ்சம் இருங்க, தோ வர்றேன்” என்று சொல்லி கீழே இறங்கி சைக்கிளில் விருட்டென்று போனான்.

“சட்டுபுட்டுன்னு ஆவட்டும். இப்பக் கிளம்பினாத்தான் காலம்பிரயாவது போய்ச் சேரலாம்.” வேன் டிரைவர் கத்த ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் பால்காரன் திரும்பி வந்தான்.

“இது எங்க அப்பா” என்று பின்னால் வந்த பெரியவரைக் காட்டினான்.

அவரேதான். எட்டரை மணிக்கு மாடு ஓட்டிக்கொண்டு போவாரே, அதே பெரியவர்தான்.

“ஓ… நீதானா. சரி இருக்கட்டும்.” என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு, பையனோடு உள்ளே சென்றார்.

“நீங்க அப்படி கொஞ்சம் தள்ளி வெளியே நில்லுங்க. கொழந்தைகள கீழ அனுப்பிடுங்க. நான் ரெடி பண்ணிடுறேன்.” என்று எங்களை வெளியில் அனுப்பிவிட்டார்.

பையன் மேலும் கீழுமாக ஓடி வைக்கோல் கம்பு ஓலைத்தட்டி என்று ஏதேதோ உள்ளே கொண்டுபோனான்.

கால் மணி நேரத்தில் நீள வாக்கில் நேர்த்தியாக ஓலைத் தட்டி வைக்கோலால் சுற்றப்பட்டு, முகம் மட்டும் வெளியில் தெரியுமாறு வைத்து, அப்பனும் மகனுமாகவே படிகள் வழியாக பிணத்தை இறக்கி, வேனுக்குள் ஏற்றிவிட்டனர்.

“வீட்டையெல்லாம் பூட்டிக்கிட்டு, கெளம்புங்க. பார்த்துப் போகணும். என்னப்பா டிரைவர்… தண்ணியா?” என்று கேட்டுக்கொண்டே பையனுடன் கிளம்பிப் போய்கொண்டேயிருந்தார்.

***

முடிந்தது. தாத்தாவை நீர் நெருப்பாக்கி, செலவுக்கணக்கையெல்லாம் தீர்த்துவிட்டு, காரிய நாள் குறித்துக்கொண்டு, கும்பகோணத்திலிருந்து வீடு திரும்பியாகிவிட்டது. வீட்டைக் கழுவி மெழுகி, நிமிர்ந்து நிற்கும்போது தாவு தீர்ந்துவிட்டது. இருந்தாலும் கிழவன் போய்ச் சேர்ந்ததில் எங்களுக்கு பெரிய நிம்மதி; விடுதலை. ஒரு விதத்தில் மகிழ்ச்சியும்கூட.

மறு நாள் பால்காரப் பையன் வந்தான். “முடிஞ்சுதா… என்ன செய்யறது? என்னைக்காவது ஒரு நாள் போய்த்தானே ஆகணும். இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க.” என்று எங்களைச் சமாதானப் படுத்தினான்.

“வாப்பா தம்பி, உன் உதவிய மறக்கவே முடியாது.” என்று சொன்ன என் மனைவி என்னைப் பார்த்து
“எவ்வளவு கொடுக்கணும்னு கேளுங்க,” என்று சொல்லிவிட்டு, பாத்திரம் எடுத்துவர உள்ளே சென்றாள்.

“சரி தம்பி, எவ்வளவு கொடுக்கணும்?” என்று நான் கேட்டேன்.

“பால்காசுக் கணக்கா, அது அஞ்சாந்தேதிதானே கொடுக்கணும்?” என்று பால் ஊற்றிக்கொண்டே சொன்னான். “வர்றேன் சார்” என்று சொல்லி போய்விட்டான்.

“ஏங்க. இந்தமாதிரி வேலையெல்லம் யாரும் சும்மா செய்து தருவாங்களா? எதுக்கும் அந்தப் பெரியவர் வீட்டுக்குப்போய் அவரைப் பார்த்துப்பேசி, ஏதாவது கொடுத்துட்டு வந்துடுங்க. அவர் வீடு பெருமாள் கோயில் தெருவிலதான் இருக்காம்.” என்று மனைவி சொன்னாள்.

“ஆமாமாம். கிழவர் வேறு ரொம்ப முன்கோபி. அப்புறம் வீட்டு வாசலில் வந்து சத்தம் போடுவார். அதனால் ஆபீஸ் போய்ட்டுவந்து ஒரு ஏழு மணிக்கு போய் பார்த்து கொடுத்துட்டு வர்றேன்.” என்றேன்.

அலுவல் வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தாயிற்று. பெரியவரைப் பார்க்கப் போகவேண்டும். இன்று அவர் முகத்தில் விழிக்கவே தயக்கமாக இருந்தது.
நான் அவரை அன்று அப்படிப் பேசியிருக்கக்கூடாது. என்ன இருந்தாலும் வயதில் பெரியவர்.

ஐநூறு ரூபாய்த் தாளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, எங்கள் நகரைக் கடந்து, பெருமாள் கோயில் தெருவை விசாரித்து, அவர் இருக்கும் வீட்டை விசாரித்தேன்.

“செங்கேணி தாத்தா வீடா? அதோ ஒரு வேப்பமரம் தெரியுதுல்லே, அதான்.”

அந்த வீடுக்கு இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் அப்பார்ட்மெண்டுகள். இதன் நடுவில் சுமார் ஒன்றரை கிரவுண்டு அளவில் காம்பவுண்டு இல்லாமல் பனையோலையால் ஆன தடுக்குகள் முகப்பில் இருந்தன. ஒரு மூங்கில் தட்டிக் கதவு. அதை விலக்கிக்கொண்டு உள்ளே போனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒழுங்கற்ற நிலையில் நான்கு சிறிய ஓலைக் குடிசைகள். ஒரு நாட்டு ஓடு போட்ட பழைய மண்சுவர் வைத்த வீடு. ஒரு ராட்டினம் போட்ட கிணறு. அதைச் சுற்றிலும் சேறும் சகதியும். அதன் பக்கதில் பனையோலை வேய்ந்த மாட்டுக் கொட்டகை. மிகப் பெரியது. கொட்டகை கொள்ளாத மாடுகள். இங்கும் அங்குமாய் துள்ளித்திரியும் கன்றுக்குட்டிகள். ஒரு பத்து பதினைந்து ஆடுகள். சிதறியோடிய கோழிகள். ஒரு நாலுசக்கர டயர் வண்டி. ஏர்க்கலப்பைகளும், பரம்புகளும், மண்வெட்டி கடப்பாரைகளும், எல்லா வீட்டுச் சுவர்களிலும் சாய்ந்துகிடந்தன. வேப்ப மரத்தடியில் பிரம்மாண்டமான எருதுகள் கட்டப்பட்டு, மணிகளை ஆட்டியபடியே வைக்கோலைத் மேய்ந்துகொண்டிருந்தன. அதன் பக்கத்தில் தவிடு வைக்க ஒரு பெரிய மண் தொட்டி இருந்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இங்கும் அங்கும் வேகமாக நடந்து போவதும் வருவதுமாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் விளித்து, ஏதாவதொரு வேலையை செய்துகொண்டேயிருந்தார்கள். எங்கும் இரைச்சலாய் இருந்தது.

அந்தப் பெரியவர் கிணற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்தார். யாரோ ஒரு பெண் அவருக்கு முதுகு தேய்த்து விட்டுக்கொண்டிருந்தாள். அது அவரது மகளோ அல்லது மருமகளோ தெரியவில்லை.

“பெரியவரைப் பார்க்கணும்,” என்று அந்த இரைச்சலில் சத்தமிட்டு கூறினேன்.

“சித்த அந்த வண்டிமேல உட்காருங்க. மாமனார் குளிக்கிறார். வந்திடுவார்.” என்று அந்த முதுகு தேய்த்துக்கொண்டிருந்த பெண் கூறினாள்.
“டேய் பசங்களா, சாருக்கு கொஞ்சம் எடம் விடுங்கடா,” என்று அந்த வண்டியின் மீது குதித்து விளையாடிக்கொண்டிருந்த வாண்டுகளுக்கு கட்டளை போனது. அவர்களின் விளையாடில் நான் இடைஞ்சலாய்ப் போனாதால் எனக்கு இடம் கொடுத்துவிட்டு வேறு இடத்துக்கு விளையாட அவர்கள் போய்விட்டார்கள்.

சிறிது நேரம் கழித்து, முதுகை துண்டால் துடைத்தவாறே அந்தப் பெரியவர் வந்தார். கோவணம் காட்டியிருந்ததற்காக அவர் சங்கோஜப்பட்டதாகத் தெரியவில்லை.

“ஓ, நீதானா, இருக்கட்டும், இருக்கட்டும்” என்று அந்த ஓட்டு வீட்டின் வாசலில் விரிக்கப்பட்டிருந்த கோரைப் பாயில் உட்கார்ந்துகொண்டார்.

“என்ன, எல்லாம் ஆச்சா. என்ன பண்றது. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?” என்றார்.

“எல்லாம் முடிஞ்சுது. ஆனா,உங்களுக்குத்தான் நான் ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஊர்ல ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கிறதுதானே? நாளைக்கு நான் போய்ட்டா நீ வந்து தூக்க மாட்டியா?” வயதானவர்களுக்கே உரித்தான சன்னக்குரலில் சொன்னார். “இங்க இதெல்லாம் சகஜம்!”

“இருந்தாலும்….. அதுக்காக யாரும் சும்மா உதவி செய்வாங்களா? அதுவும் இந்தக் காலத்துல? அதான் உங்களப் பார்த்து குடுத்துட்டு போலாம்னு வந்தேன்,” என்று நான் கொண்டுவந்த அந்த ஐநூறு ரூபாயை அவர் முன்னால் நீட்டினேன்.

நீண்ட நேரம் மௌனமாயிருந்தார். அவர் முகத்தில் கோபம் வரும்போலத் தெரிந்தது.

“இப்படி கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன்,” என்று என்னை நிமிர்ந்து பார்த்தார். “இதெல்லாம் ஊர் வழக்கமில்லை.”

நான் தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.

“வேண்டாம்யா. அதை மடிச்சு உள்ளாற வை. காப்பி குடிக்கிறயா?”

“…..”

“மோரு?”

“இல்ல, வேண்டாம் பெரியவரே… நீங்க ஏதோ கோபத்துல இருக்கிறமாதிரி படுது.”

“எதுக்கு?”

“ஒரு வாரத்துக்கு முன்னால, நீங்க மாடு ஓட்டிக்கிட்டு வரும்போது நடந்த சின்ன பிரச்சினைதான். நான் உங்களை அப்படிக் கேட்டிருக்கக் கூடாது.”

இதற்கிடையில் ஒரு தட்டு நிறைய சாதமும் ஒரு கிண்ணத்தில் குழம்பும் கொண்டுவந்து அவர் முன்னால் வைக்கப்பட்டது.

“சாப்பிடறியா?”

“வேண்டாம்!”

தட்டை இழுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, சாதத்தின் நடுவில் ஒரு குழி தோண்டினார். அதில் குழம்பை ஊற்றி, தன் வலது கை முழுவதையும் விட்டு பிசைந்து, கை நிறைய உருண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மென்று விழுங்கிய பின் சொன்னார் :

“நான் நடக்கத் தெரிஞ்சதிலேருந்து மாடுதான் மேய்க்கிறேன். இப்போ, ரோட்டை தாண்டி அந்தாண்ட போனா, அங்கதான் தாங்கல் இருக்கு. மாடுகள ஓட்டியாந்து மேயவிட்டு, சாயந்திரம் ஆச்சின்னா, தாங்கல் குட்டையில கழுவி அதே ரோட்டு வழியாத்தான் வீட்டுக்கு திரும்பி வர்றேன். ரோடுன்றது இப்பத்தான் வந்தது. அதுவும் இந்த பை-பாஸ் தேவையேயில்ல. அப்போல்லாம் அது ஒத்தையடிப்பாதை. ரெண்டு பக்கமும் சவுக்குத்தோப்பும், பனந்தோப்புமாத்தானிருக்கும். சாராயம்கூடக் காய்ச்சுவாங்க.

அங்க ஒரு கா காணி எங்களுக்கு சொந்தமாயிருந்தது. ஏதோ பை-பாஸ் ரோடுக்குன்னு சொல்லி புடிங்கிட்டாங்க. நெறைய பேருகிட்டேருந்து பறிச்சிக்கிட்டாங்க. ஒத்த பைசா இன்ன வரைக்கும் குடுக்கலை. அந்தப் பக்கம் ரோடு இருக்குதுன்றதுக்காக பயந்துக்கிட்டு மாடுங்களை எங்க கொண்டுபோய் மேய்க்கறது? வேற மேச்ச நெலம் இல்ல. எல்லாத்தியும் பிளாட்டு போட்டுட்டாங்க. நீங்க பாரதியார் நகரா? உங்களுக்கு இதெல்லாம் என்னத் தெரியப் போகுது? நீங்க வீடு கட்டி குடியிருக்கிற அந்த எடம் பாதி ஏரி, பாதி சுடுகாடு. மண்ணத்தள்ளி, பட்டா வாங்கி, உங்களுக்கு கட்டிக்குடுத்துட்டானுங்க.

எங்களுக்கு வெவசாயம், மாடு மேய்க்கிறதத் தவிற எதுவும் தெரியாது. நெலத்தப் பிடுங்கிட்டப்புறம், எங்களுக்கும் கொஞ்சம் கிலிதான். அதான், இப்போ எங்க பசங்க வேற வேலைக்குப் போறாங்க. அதோ அந்த வீடு பெரியவனோடது. பிளம்பிங் வேல செய்யுறான். இந்த வீடு இன்னொரு பையனோடது. லாரி கிளீனராய்ப் போய்ட்டான். அதோ அந்த வீடு இன்னொருத்தனோடது. போர் போட்டுக் கொடுக்கற வேலை. அதோ இருக்கே அந்த வீடு இன்னொருவனோடது. அவன் லோடு வண்டி ஓட்டுறான். கடைசீ பையன் பால் ஊத்தறான். என்னோடதான் இந்த ஓட்டு வீட்டிலே இருக்கிறான். இந்த வீடுதான் என் தாத்தன் பூட்டன் பொறந்து செத்த வீடு. மவளுங்க மூணு பேர கட்டிகொடுத்திருக்கேன். நல்லாத்தான் இருக்காங்க. இதோ வெளையாடுதுங்களே, இதுங்க என் பேரப் பசங்க. ஒரே சமையல், சாப்பாடு. படுக்கறதுதான் வேற வேற.

இதோ இருக்கறமே, இந்த இடம் எங்க பூர்வீக குடியிருப்பு. கிராம நத்தம். தெனத்துக்கு ஒருத்தன் வர்றான். ‘பெரியவரே, இந்த எடத்தை குடுத்துடேன். இத்தினி கோடி தர்றேன், அத்தினி கோடி தர்றேன்’ அப்படீன்னு தொந்தரவு பண்றானுங்க.

காசு இருந்து என்னத்தக் கிழிக்க? பணத்த வாங்கி பொட்டிலதான் பூட்டிக்கணும். இதே இப்ப சாப்பிட்டதத்தானே அப்பவும் சாப்பிடப்போறோம்? என்ன, கொஞ்சம் சொகுசா இருக்கலாம். ஆனா அந்த சொகுசு எங்க யாருக்கும் ஒத்துக்காது. எங்களுக்கு கை இருக்கு, காலிருக்கு உழைக்க. உழைக்கலைன்னா எங்க குடும்பத்துக்கு நோவு புடிச்சுக்கும். உழைச்சே பழக்கப் பட்டவங்க நாங்க. எழுவது வயசு எனக்கு. ஒரு ஊசி போட்டதில்ல. பத்து பேர அடிச்சு சாய்ச்சுடுவேன். இந்தா… என் கையப் பாரு… எப்படிக் காய்ச்சுக் கெடக்கு.

என்னை உள்ள தள்ளிடுவேன்னு சொன்னானே, அவன் ஒரு அறையோட தப்பிச்சான்! யாருக்குத் தம்பி நாங்க பயப்படணும்? நான் என்ன திருடிட்டேனா? ரோடுல மாட்ட ஓட்டிக்கினு போகக்கூடாது அப்படீன்னு கூட ஒரு சட்டம் போட முடியுமா? அப்பிடிப் போட்டா, நான் நேரா கோர்ட்டுக்கே போயி, ஜட்ஜோட சொக்காய புடிச்சிடமாட்டேன்?. நான் எதையும் விட்டுக்கொடுக்கறதில்லை. எங்களுக்கு நெலத்தோட நஷ்ட ஈடு சரியாக் கொடுக்கலைன்னா, ஒரு நாளைக்கு அந்த ரோடு குறுக்கால படுத்திடுவோம். அப்ப எப்படிப்போவீங்க நீங்க?”

சாப்பிட்டு முடித்து, தட்டில் கைகழுவி, பாயிலிருந்து தள்ளி வைத்தார்.

“காலம் மாறுது, தம்பி. அதுக்கேத்தாமாதிரி சட்டுன்னு, எங்களை மாத்திக்க முடியலை,” என்று ஒரு அழுக்குத் தலையணையை இழுத்துவைத்து, அதன் மீது சாய்ந்துகொண்டார். விளையாடிக்கொண்டிருந்த அத்தனை பிள்ளைகளும் மொத்தமாக, கோவென்று குரலெழுப்பியவாறு, பெரியவர் மீது வந்து விழுந்தன.

“அட என் கண்ணுங்களா…” என்று குழந்தைகளை அணைத்துக் கொஞ்சினார். “இண்ணைக்கு நீங்க நல்லா விளையாடினீங்களா?”

பிரமித்துப்போய் அமர்ந்திருந்தேன் நான்.

இதற்கிடையில் யாரோ ஒரு மருமகள் சூடாக காப்பி போட்டுக் கொண்டுவந்தாள். மிகவும் திக்காக இருந்தது. புகை வாசனை அடித்தது.

“குடி தம்பி” என்றார் பெரியவர்.

“இங்க நடக்கற நல்லது கெட்டதுக்கு எல்லாம் நான் போவேன். எங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மொத ஆளா நான் நிப்பேன். வெந்தத் தின்னு செத்துப்போறதுக்கு நாம என்ன மாடுங்களாய்யா? சொரண இல்லாத வாழுறதவிட, தூக்கு மாட்டிக்கலாம். அதெல்லாம் போகட்டும். நீங்க வேல மெனக்கெட்டு காசு குடுக்க வந்த பாரு… அத வெளிய சொல்லாத. பால் ஊத்த வர்றாம்பாரு என் கடைசீ பையன், அவனுக்கு தெரியவே வேண்டாம். ரொம்ப வருத்தப்படுவான்.”

“சரிங்க பெரியவரே… ஆனா அன்னைக்கு நடந்ததுக்கு நான் ரொம்பவே வருத்தப்படறேன். அதை ஏதும் மனசுல வச்சிக்காதீங்க.”

“திருப்பியும் அதையே பேசுறீங்களே… போய்ட்டுவா தம்பி. எனக்கு தூக்கம் வருது.” என்று சொன்னார் பெரியவர். எத்தனை திறந்த மனது?

கொடுத்த காப்பியை குடித்து முடித்துவிட்டு, நீண்ட நேரம் மௌனமாகவே அமர்ந்திருந்தேன். அந்தச் சூழலை சுற்றிலும் ஒரு கண்ணோட்டம் பார்த்தேன். இதுவல்லவா வாழ்க்கை? கவுரவமான வாழ்க்கை. பணத்துக்கு மடிந்து போகாத வாழ்க்கை. சட்டத்துக்கு பயந்து போகாத வாழ்க்கை. உரிமையை விட்டுக் கொடுக்காத வாழ்க்கை. ஒன்றோடொன்று உதவி ஒத்தாசை செய்துகொள்ளும் வாழ்க்கை. உழைத்தே உண்ண விரும்பும் வாழ்க்கை. இதோ… வாழ்வாங்கு வாழும் மனிதக் குடியிருப்பு!

கனத்த மனதுடன் விடை பெற எழுந்தேன்.

“பெரியவரே, போய்ட்டு வர்றேன்.”

“…..”

“பெரியவரே…, ஐயா….?”

குழந்தைகளின் அரவணைப்புகளினூடே அவரின் குரட்டை சத்தம் பலமாகக் கேட்டது!!

சனநாயகம் அருளிய பரதேசிக் கீதாஎது நடந்ததோ, அது இனி நன்றாகவே நடக்காது.
எது நடக்காதோ, அது இனி நன்றாகவே நடக்கும்.

எது நடக்க இருக்கிறதோ, ங்கொய்யால, அது நடந்தே தீரும்!
உன்னுடைய எதையும் நீ இழப்பாய்; எப்போதும் அழுவாய்.

எதை நீ கொண்டுவந்தாய்; அதை நீ கேட்பதற்கு?
எதை நீ வைத்திருக்கிறாய்; அதை அடமானம் வைப்பதற்கு?

எதை நான் எடுத்துக்கொண்டேனோ, அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ இழந்தாயோ, அது உன்னிடமிருந்தே திருடப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளைமுதல் என்னுடையதாகிறது.
மற்றொரு நாள் வேறொருவருடையதும் என்னுடையதாகிறது.

இதுவே எனது நியதியும்
எனது ஆட்சியின் சாரம்சமும் ஆகும்.

– சனநாயகம் அருளிய பரதேசிக் கீதா.

வாழ்வின் பொருள் தேடும் அகராதிகள்


கேட் மெல்லத்திறக்கப்பட்டு, எட்டிப் பார்த்தவாறே பார்வை உள்ளே சென்றது.

“வணக்கம் சார், அகராதி… இங்கிலீஷ் டு தமிழ்…”

“டேய்… எருமக் கடா, டேப் தட்றா… டேப் தட்றா”

“சேவ் பண்ணலையா, முண்டக்கலப்ப… எத்தனை முறை சொல்லியிருக்கேன், அர மணி நேரத்துக்கு ஒருக்கா சேவ் பண்ணுடான்னு? எஸ்கேப் தட்டு! கண்ட்ரோல் -ஆல்ட் – டெலிட்…?”

“சார்… வணக்கம். இங்கிலீஷ் டு தமிழ் அகரா…”

“சனியன் ஹேங்க் ஆகிடுத்து…”

“என்ன பண்றது இப்போ…? எம்டி கேப்பானேடா… அர்ஜெண்ட் ஜாப்… காலையிலேர்ந்து ஒர்க் பண்ணினது எல்லாமே வேஸ்ட்!”

“பன்னாட, ஒண்ணு, காப்பிய குடிச்சுட்டு வேலைய செய்திருக்கணும்… இல்லைன்னா காப்பியே வேண்டாம்னு சொல்லியிருக்கணும். கீ போர்டையே கொளமாக்கிட்டியேடா?”

“சார்…….. சார்…….. அகராதி சார். லேடஸ்ட் வெர்ஷன் சார்…”

“மூதேவி, அப்-டு-டேட்ல, டேலி பண்ணி வச்சிருந்தேன். எல்லாம் போச்சு. எம்டி கேக்கப்போறான். இண்ணிக்கித்தான் ஐ டி சப்மிஷன் லாஸ்ட் டேட்…”

“10 பெர்சண்ட் டிஸ்கவுண்ட் தர்றேன் சார். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்!”

“வாட் 14% போட்டு என்ட்ரி குடுக்கறதுக்குள்ளார தாவு தீந்துபோய்டுத்து. ஒரு மாசத்து அக்கவுண்ட நாசனம் பண்ணிட்டியேடா…”

“சார்… இங்கிலீஷ் டு தமிழ்… ரொம்ப ஈசியா இருக்கும் சார்…”

“என்ன படிச்சி பிரயோஜனம்… உனக்கு மூளையே இல்லையே… மூஞ்சியப் பாரு?! எழுந்து வா… எம்டி கூப்பிடறான். பிராப்ளத்த சொல்லுவோம். கழுத, ஒத்துக்கிடுச்சின்னா சரிதான்… இல்லைன்னா வேற வேலைய பாத்து தேடிப் போகவேண்டியதுதான்…”

“சார், டிக்ஷ்னரி…?”

மூன்று பேர் எழுந்து எம் டி ரூம் கதவைத் தயக்கத்துடனே திறந்து எட்டிப் பார்த்தவாறு உள்ளே போனார்கள்.

மீண்டும் கேட் கதவு மெல்லச் சாத்தப்பட்டது.

“ஒரு நாலு டிக்ஷனரி கூவி விக்க லாயக்கில்ல… எம். காம் படிச்சிருக்கிற!” எப்பவும் போல சேல்ஸ் மேனேஜர் எறிந்து விழுவான்.

அடுத்த கேட் மெல்லத் திறக்கப்பட்டு, பார்வை தயங்கி உள்ளே சென்றது.

“வணக்கம் மேடம்… இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரி மேடம்… பத்து பெர்சண்ட் டிஸ்கவுண்ட்…”

கோட்டு சூட்டு போட்டஅண்ணேகோட்டு சூட்டு போட்டஅண்ணே
கோபிக்காம எனக்கு நீங்க,
நாளொன்னுக்கு நூறு நூறா
நாலு நாளாக் குறையுறத,
கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே.
புண்ணியமாப் போகும், உனக்கு
புள்ளைங்க நாலு பொறக்கும்.

மட்டப் பலக மண்ணுவெட்டி
சோத்து மூட்டைக் கட்டுக்கு
முப்பது ரூபா டிக்கெட்டு.
அந்த சொத்துக்கள சொமந்து நிக்கும்
இந்த சோப்ளாங்கி ஒடம்புக்கு
இன்னொரு முப்பது டிக்கெட்டு.
வேலைக்குப் போக வர, இந்த
எழவெடுத்த பஸ்ஸுக்கு
அழவேணும் ஒரு அறுவது.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
கொஞ்சம் கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

ஒத்த ரூபா அரிசி அவிக்க
பத்து ரூபா வெறகுக் கட்டு.
வெந்தத வழிச்சி முழுங்கி
உள்ளே தள்ளி செமிச்சு வைக்க
உப்பு புளி மொளகா,
கத்திரிக்காக் கருவாடு.
இத்தனையும் சேத்துப் பார்த்தா
மொத்தமா ஒரு நூறு.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
எனக்கு கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

ஆனைக்குள்ளே ஆடித்தூங்க
அடம்பிடிக்கும் அழுமூஞ்சி
ஊள மூக்குக் கைக் குழந்தை
உறிஞ்சிக்குடிக்கும் பாலுக்கு
நாளன்னைக்கும் ஒரு நாப்பது.

வெயில் வதக்கும் பொழப்பு;
வேலமேல கொஞ்சம் அலுப்பு.
களைப்பு போக்க டீக்குடிக்க,
பீடிக்கட்டு புகை பிடிக்க
பாக்கு கீக்கு போட்டுத் துப்ப
ஒரு நாப்பது ரூபா.

துணி துவைக்க, குளிக்க,
சோப்பு சாம்ப்பு வாங்கிக்கவும்
வச்ச கண்ணு வாங்காம
வாசலையே பாத்து நிக்கும்
புள்ளப் பூச்சி ரெண்டுத்துக்கும்
உப்புக் கடல ஒடச்சக்கடல
வாங்கிப் பையில் போட்டுக்கவும்
இன்னொரு நாப்பது.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
கொஞ்சம் கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

வேணாம்னு ஒதுங்கினாலும்
வா வான்னு கூப்பிடுற
வெக்கங்கெட்ட மானிட்டரு.
என்னத்தச் சொல்ல அண்ணே…
ஒடம்பு வலி மனசு வலி
ஒத்தடமா ஒரு மருந்து.
கருவுமெண்டு கடையிலயே
கூவிக் கூவிக் குடுக்கறாங்க.
அதுக்கு ஒரு நூறு.

தீவாளித் துணியெடுக்க,
சொந்த ஊரு போகவர,
பள்ளிக்கோடப் பீசு கட்ட,
வட்டிக்கு வாங்கிப் போட்ட
துட்டுக்கு வட்டின்னு
தெனத்தன்னிக்கும் ஒரு நூறு.

நாள் பூரா மாரடிச்சு
நானூறு கூலி வாங்க,
‘தீனிக்கி தானின்னு’
ஒத்த ரூபா மீறாம,
ஓட்டமா ஓடிப்பூடும்
ஒரு ஒரு நாளும்.

ஆனா பாருங்க
அட, படிச்ச அண்ணே,
போன வாரம் பூராவும்
போக்கிடமே தெரியாம
நாளொண்ணுக்கு எனக்கு
நூறு ரூபாக் குறையுதண்ணே…
எனக்கேதும் தெரியாம,
என் கோமணத்தில் கைய வுட்டு,
துட்டையெல்லாம் திருடுறாங்கன்னு
தெனத்தன்னிக்கும் ஒரு டவுட்டு.

கோட்டு சூட்டு போட்டஅண்ணே
கோபிக்காம எனக்கு நீங்க,
கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே
புண்ணியமாப் போகும், உனக்கு
புள்ளைங்க நாலு பொறக்கும்.

செல்லக்குட்டிவிடியல் நான்கு மணி. பயாலஜி டெஸ்ட் என்று என் மகள் அலாரம் வைத்து, எழுந்து சப்தமிட்டு படித்துக்கொண்டிருந்தாள். வேத பாராயணம் பண்ணும் பாலகன் மாதிரி, சம்மணமிட்டு, தன் உடலை முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டிருந்தாள். தரையிலிருந்த புத்தகத்து வரிகளை கண்களால் ஓட்டமிட்டு, அண்ணாந்து பார்த்து ஒப்புவித்துக்கொண்டிருந்தாள். ஒரு காக்கை தண்ணீர் குடிப்பதுபோல அந்தக் காட்சி இருந்தது.

“செல்லக்குட்டீ… டீ போட்டுத் தரவா?” என்று கேட்ட மறு நொடியில் எனக்கு பதில் வந்தது.

“அப்பா… கொஞ்சம் பேசாம கம்முன்னு இரு. நான் நெறைய படிக்கவேண்டியிருக்கு.”

நான் கதவை மெல்லத் திறந்தேன். சில்லென்ற ஊதைக் காற்று முகத்தில் வீசியடித்தது.
விடியலின் வெளிச்சமும் மேகக்கருக்கலும் கலந்த ஒரு மங்கிய விடியல் அது. அப்போதுதான் மழைவிட்டு, தாழ்வாரத்து ஓட்டு முனைகள் வரிசைக்கிரமமாய் நீரைத் தாரைத்தாரையாய் வார்த்துக்கொண்டிருந்தன. தெருவில் மணலை அறித்து ஓடிய தெளிந்த நீரோட்டத்தில் விடியல் வானம் பிரதிபலித்து, சிக்கல் நிறைந்த ஒரு ஓவியத்தை எனக்கு வரைந்து காட்டிக்கொண்டிருந்தது.

குளிரின் தாக்கத்தால், நான் கதவைத் திறந்து உள்ளே திரும்புகையில், எனக்கு விசும்பியழும் சத்தம் கேட்டது.

“என்ன செல்லக்குட்டி, என்னவாச்சு?” என்று தலையக் கோதியவாறு கேட்டேன்.

“அப்பா, ஒண்ணுமே புரியலைப்பா. நெறைய புதுசு புதுசா வார்த்தைங்க பக்கம் பக்கமா வந்துகிட்டே இருக்குப்பா. எதையுமே என்னால மனப்பாடம் செய்ய முடியலை… பாடத்தையும் புரிஞ்சு படிக்க முடியலை,” என்று என் விரலைப் பற்றித் தேம்பியழுதாள் என் குழந்தை.

“விடும்மா. படிக்கக் கஷ்டமாயிருந்தா, இன்னைக்கு லீவு போட்டுடேன்?” என்று சொன்னவுடன் எனக்கு ஒரு கராரான பதில் கிடைத்தது.

“நல்லாப் படின்னு சொல்வீங்களா, அதவிட்டுட்டு, லீவுபோடு அது இதுன்றீங்களே” என்று தூக்கத்திலிருந்த என் மனைவி பாயைச் சுருட்டி எழுந்தவாறு, என்னைக் கடிந்துகொண்டாள். “நல்லாப் படிக்கணும்னுதானே கவுருமெண்டு ஸ்கூல்ல இருந்து கான்வெண்டுக்கு மாத்தினது?”

“ஆமா. கான்வெண்டுக்கு மாத்தினதுதான் தப்பு.” என்று எனக்குள் நான் முணுமுணுத்துக்கொண்டேன்.

வெளியில் மழை வெளுத்து வாங்கியது. கூரை ஓடுகள் தடதடவென்று சப்தமிட்டன.

“அப்பா, அந்த கரீமா மிஸ்ஸை நெனைச்சாலே பயமா இருக்குப்பா. சரியா மார்க்கு எடுக்கலைன்னா, கிளாசுக்கு வெளியில நிக்கவைச்சுடுவாங்க. ரொம்ப கேவலமா திட்டுவாங்கப்பா… எல்லார் முன்னாலயும் முட்டி போடச் சொல்றாங்கப்பா. ரொம்ப அவமானமா இருக்கும்,” என்று கதறியழ ஆரம்பித்தாள் என் மகள். “இந்த முறை நம்ம ஸ்கூலுக்கு ‘சென் பெர்சென்ட்’ ரிசல்ட் வரணும்னு பிரின்சிபால் சொல்லியிருக்கார், பார்த்துக்குங்க. ஒருத்தர்கூட ஃபெயில் ஆகக்கூடாது… அப்படீன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க, அப்பா.”

“இதப் பாரு செல்லக்குட்டீ, நான் கண்டிப்பா சொல்றேன். இன்னைக்கு லீவுதான். கவலையேப் படாத. வெளியில பாரு, சும்மா பேய்மழை அடிக்குது. நீ வேணும்னா பாரேன், கண்டிப்பா லீவு அறிவிச்சுடுவாங்க.”

“ஆஹா… கொழந்தைக்கு நல்ல புத்தி சொல்ற அப்பனை இந்த வீட்டிலதான் எல்லாரும் பார்க்கணும். அட, எழுந்து போங்க. கொழந்தை படிக்கட்டும். ஆயிரம் ஆயிரமா பணத்தக் கொட்டி கான்வென்டுல சேத்துருக்கோம். நல்லா படின்னு சொல்றத விட்டுபுட்டு…” என்று அடுப்பங்கரைக்கு போனாள் என் மனைவி.

“அப்பா, ஏம்ப்பா என்னை கான்வெண்டுல சேர்த்தீங்க…” என்று என்னை நிமிர்ந்து பார்த்து என் குழந்தை கேட்டாள்.

“நான் என்னம்மா செய்யறது? இந்த விஷயத்துல யாரோ சொன்னதைக் கேட்டு, அம்மாதான் அடம் பிடிச்சுட்டா. உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பார்த்துப் படிம்மா.”

“இல்லைப்பா… ஒம்பதாவது வரையிலும் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு, இப்ப இங்கிலீசுல படிக்கிறது, ரொம்பவும் கஷ்டமா இருக்குப்பா. ஒன்னுமே புரிஞ்சுக்க முடியலை. இந்த கரீமா மிஸ் வேற புஸ்தகத்துல இருக்குறத அப்படியே படிச்சுட்டு போய்ட்றாங்க. ‘புரியலை மிஸ்’ அப்படீன்னு கேட்டா, ‘உன் மர மண்டைக்கு புரியாது’ அப்படீனு தலையில ஓங்கி கொட்றாங்க.”

டீயை ஆற்றிக்கொண்டே என் மனைவி வந்தாள். “இங்கப்பாரு செல்லம்மா. எல்லாம் உன் நல்லதுக்குத்தான் செய்யுறோம். இந்த ஊருல படிக்கிறவுங்க எல்லாருமே இப்ப புதுசா வந்த உங்க கான்வென்டு ஸ்கூல்ல சேர்ந்துட்டாங்க. நாம மட்டும் சும்மா இருக்க முடியுமா? எவ்வளோ கஷ்டப்பட்டு, பீஸ் கட்டி அந்த பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டுருக்கோம்? நல்லா படி தாயீ. படிச்சு ஒரு டாக்டரோ எஞ்சினீயரோ ஆனாத்தான், என்னய மாதிரி, எவனையாவது கட்டிக்கிட்டு லோல் படத் தேவையில்ல.”

எனக்குக் டீக்கிளாசு சுரீரெனச் சுட்டது. “நீங்க அமைதியா இருங்க. அவ படிக்கட்டும்.”

மீண்டும் பயாலஜி பாடங்களை படித்து மனப்பாடம் செய்யத் துவங்கினாள் என் செல்லக்குட்டி.

நான் சுவற்றில் தலையணை கொடுத்து சாய்ந்துகொண்டேன். என் மகளின் முகத்தைப் பார்க்க எனக்கு ரொம்பவும் பரிதாபமாகப் பட்டது. அவள் மனமுவந்து படிக்கவில்லை. அந்த விளக்கு வெளிச்சத்தில், அவளின் உள்மன வலி அவளின் முகத்தில் தெரிந்தது.

நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன். ‘ஏய் செல்லக் குட்டி, நீ கவலைப் படாத. இந்தப் பேய் மழைக்கு கண்டிப்பா லீவுதான்.”

ஆறு மணிவரை படித்துவிட்டு புத்தகத்தை மூடினாள் செல்லக்குட்டி. பூனை மாதிரி நடந்து அடுத்த அரையிலிருக்கும் டிவியை திருகினாள். நானும் கூடவே எழுந்து சென்றேன்.

“என்னடீ இப்ப டிவி கேக்குது உனக்கு? வென்னி வெச்சிருக்கேன். குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கெளம்புற வழியப் பாரு” என்று என் மனவி இறைந்து கத்திக்கொண்டிருந்தாள்.

நான் மட்டும் ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டே வந்தேன். யாரோ சொன்னார்கள். ஆளுங்கட்சி சேனலில் தான் ‘பள்ளி விடுமுறையை’ உடனடியா தெரிவிச்சுடுவாங்களாம். அவர்கள் சொன்னதுபோல அந்த ஆளும் கட்சி சேனலின் கீழே ‘ஃப்ளாஸ் நியூஸ்’ வந்து, தொடரோட்டமாய் ஓடிக்கொண்டிருந்தது.

‘பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு : மழை காரணமாக, நாகை, கடலூர் மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.’

“ஏய் செல்லக்குட்டி… உனக்கு கண்டிப்பா லீவுதான். ஒவ்வொரு மாவட்டமா சொல்லிக்கிட்டு வர்றான்.” என்று உற்சாகத்தில் நான் கத்தினேன்.

“என்னங்க இது. சின்னப் பயங்க மாதிரி பேசுறீங்க? நீங்களே உங்க பொண்ணை ஸ்கூலுக்கு போகவேண்டாம்னு சொல்றீங்களே, கொஞ்சமாவது கேக்க நல்லாவா இருக்கு.” என்று கடிந்துகொண்டாள் என் மனைவி.

எனக்குத் தேவை செல்லக்குட்டி பள்ளிக்குச் செல்லக்கூடாது. அவ்வளவுதான். இன்றைய தேதிக்கு பயாலஜி டெஸ்ட் தள்ளிப்போனால், ஓரளவுக்கு இன்னும் நன்றாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

தலை வாரி, பள்ளிச் சீருடை அணிந்து, முதுகில் சுமையை மாட்டிக்கொண்டு, முகம் நிறைய சோகத்தை அப்பிக்கொண்டு, என் முதுகுக்குப் பின்னால் வந்து நின்றாள் செல்லக்குட்டி. “என்னப்பா, லீவு விடமாட்டங்களா?”

நானும் வைத்த கண் வாங்காமல் டிவிப் பெட்டியை பார்த்துக்கொண்டேயிருந்தேன். நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை… ம்ஹூம், இன்னும் திருவள்ளூர் மாவட்டம் அறிவிக்கப் படவில்லை.

பள்ளி செல்லும் வாகனத்தின் ஒலி வீட்டு வாசலில் கேட்டது. அதன் ஒலியிலேயே அதன் அவசரம் தெரிந்தது.

என் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லக்குட்டி கேட்டாள்.

“அப்பா, நானே லீவு போட்டுவிடட்டுமா. சரியாவேப் படிக்கலைப்பா. பயமா இருக்கு….” என்று சொல்லி முடிப்பதற்குள் என் மனவி, செல்லக்குட்டியை வலிய இழுத்தாள்.

“நல்லா இருக்கு கதை. ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியா இருக்கீங்களே. அடி செல்லக்குட்டி, வேன் நிக்குது வாடி,” என்று தரதரவென இழுத்துக்கொண்டு, கொட்டும் மழையில் நனைந்தவாறே வாசலைக் கடந்து சென்றார்கள். செல்லக்குட்டி என்னையே திரும்பித் திரும்பி பார்த்தவாறு வேனில் ஏறிச் சென்றுவிட்டாள்.

நான் கையசைத்து விடை கொடுத்துவிட்டு, திரும்பவும் டிவியைப் பார்த்தேன்.

‘நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர்….’

நான் தெருவையே வெறித்துப் பார்த்துக்கொடிருந்தேன். தெருவில் மெல்லியதாய்ப் பரந்து ஓடிக்கொண்டிருந்த மழை நீரில், பள்ளி வேன் தன் சக்கரங்களைப் பதித்து கலக்கிவிட்டுப் போயிருந்தது.

சொக்கலால் சேட்டும் ஷேர் மார்க்கெட்டும்


இன்று சொக்கலால் சேட்டுக்கு ஒரு சோக நாள். அவருடைய ஷேர் மார்கெட் வெள்ளாமையில கரடி வந்து உள்ளாற புகுந்து அடிச்சி, கடிச்சி, துவம்சம் செய்ஞ்சுடுச்சாம். அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலதான், சரியா காலம்பர பத்து மணிக்கு, சேட்டுக்கு சேதி தெரிஞ்சுது. 16 கோடிக்கும் மேல நஷ்டமாயிடுத்தாம். நாடி லபக்கு லபக்குன்னு அளவுக்கு மீறி துடிக்க, பளபளப்பான சொட்டை மண்டையிலேருந்து வியர்வை தாரைத் தாரையாய் சொட்டிக்கொண்டிருந்தது சொக்கலாலுக்கு. தன்னுடைய ரங்க ராட்டினம் நாற்காலியில வாய பொளந்த மேனிக்கு மல்லாக்க சாய்ஞ்சு கெடந்தாரு சேட்டு.

அவரோட பெர்சனல் செக்ரடரி மஞ்சு சேஷாத்ரிக்கு (எம்.பி.ஏ) கொஞ்சம் பேஜாராப் போய்டுத்து. சேட்டின் ஏ.சி அறையிலேருந்து வெளியில படதட்டத்தோட ஓடி வந்து, ஆபீஸ்ல வரிசையா உட்கார்ந்து கம்ப்யூட்டர்லயே ஷேர் மார்கெட்ட நொடிக்கொருதடவை நாடி பார்த்துக்கிட்டிருந்த எல்லாருக்கும் கேக்கறமாதிரி கத்தி சொல்லுச்சி. “எம்.டி ய யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இன்னைக்கு விசிட்டர் யாரையும் அலோ பண்ணாதிங்க. நீங்களும் யாரும் என்னைக் கேக்காம உள்ளாற போகவேண்டாம்.” அலுவலகமே அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு பத்து நிமிட இடைவெளியில, சேட்டுவோட பொஞ்சாதி டென்ஷனோட ஆபிசுக்கு வந்தாங்க. நெத்தியில ‘சீரோ’ வாட்சு பல்பு மாதிரி ஒரு பெரிய நெத்திச்சுட்டி டங்கு டங்குன்னு இடமும் வலமுமா ஆடிக்கிட்டே இருந்தது. அந்த அம்மாவோட உடம்பின் அகலமே குறைஞ்சது மூணு அடி இருக்கும். வெயிட்டு கேக்கவே வேணாம். நூறைத் தாண்டியே ஆகணும். இரண்டுக்கு இரண்டு சதுர அடி அகலத்துல இருக்கிற உப்பிப்போன வயித்தை சங்கோஜமில்லாம காட்டிக்கிட்டே வந்தாங்க. அவுங்க நடையில டென்ஷன் ஏகத்துக்கு இருந்தாலும் அவங்களால ஆமை மாதிரித்தான் நடக்க முடிஞ்சது! மஞ்சு சேஷாத்ரி, மிசர்ஸ் சொக்கலால் சேட்டை கைத்தாங்கலாய் பிடித்தபடி சேட்டின் அறைக்கு கூட்டிக்கொண்டு போச்சு.

சேட்டைப் பார்த்தவுடனே, மிசர்ஸ் சொக்கலால் ஹிந்தியில ஏதேதோ புலம்பியவாறு கண்ணீர் விட்டு, தலையைக் கோதிவிடுவதற்கு முடியில்லாததால, தடவிக் குடுத்தாங்க. மனைவியை பார்த்த பின்புதான் சேட்டுக்கு கொஞ்சம் அசுவாசம் வந்தது. ஒரு பெரிய டம்ளர்ல இருந்த ஐஸ் வாட்டரை மொடக் மொடக்னு குடிச்சாரு.

“மஞ்சு, கொஞ்சம் வெளிய இரு…” என்று மிசர்ஸ் சொக்கலால் சொன்னதும் மஞ்சு, கொஞ்சமா கதவைத் திறந்து வெளியில வந்துடுச்சி.

அடுத்த ஒரு அஞ்சு நிமிடத்துல ஒரு உச்சிக்குடுமி ஐய்யர் உள்ளார போனார். சேட்டம்மா வரும்போதே டாக்டருக்கு போன் பண்ணுச்சோ இல்லையோ ஐயருக்கு போன் பண்ணி இருக்குபோல! ஃபேமிலி டாக்டர் மாதிரி, ஃபேமிலி ஐயர்.

மஞ்சு கொஞ்சமாக் கதவத் தொறந்து வழிவிட்டதால, ஐயரால உள்ளே நுழைய முடியல. ஐயரின் உடம்பு சேட்டம்மாவின் உடம்பை விட மூணு அங்குலம்தான் கம்மி. அதனால மஞ்சு அறைக் கதவை ‘பாணா’வா தொறந்தப்புறம் தான் ஐயரால உள்ளார போக முடிஞ்சது. அப்படி கதவை விரித்துத் திறந்தப்போ, அலுவலகத்துல இருந்த அத்தனை பேராலும் சேட்டையும் சேட்டம்மாவையும் பாக்க முடிஞ்சது. பாவம், ரொம்ப சோகத்துலதான் இருந்தாங்க. சேட்டுவின் தலைக்குப் பின்னால, பெரிய கோல்டு கலர் பிரேமுக்குள்ளாற, சீரியல் லைட்டு, பட்டை நாமத்தோட ஜொலித்துக்கொண்டிருந்த ஏழுமலையான் கூட, இங்கேருந்து பாக்கும்போது, சற்றே முகம் வாடினாப்புலதான் தெரிஞ்சாரு.

உள்ளே நுழைஞ்ச ஐயர், எடுத்தவுடனே சொக்கலால் சேட்டுகிட்ட சேதிய சொன்னாரு. “நான் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கேன். திருப்பதியானுக்கு வைர மாலை நேர்த்திக் கடன் ஒண்ணு பெண்டிங்ல இருக்குன்னு. நீங்க யாரும் அதை காதுல போட்டுக்கலை. அதனாலதான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. ஒரு வைரமாலை செய்ஞ்சு ரெண்டு நாள்ள திருப்பதியானுக்கு சாத்திடணும். இதுதான் பரிகாரம். அப்புறம் எல்லாம் சரியாகிடும் பாருங்கோ. என்ன, ஒரு அறுபது லட்சம் ஆகப்போகுது. செலவோட செலவா இதையும் செஞ்சுடுங்க. மிட்டாலால் சேட்டைக்கூட போன வருஷம் இந்த சாங்கியத்தை செய்யச்சொன்னேன். இப்ப அவருக்கு எல்லாம் நல்லபடியா நடந்துண்டிருக்கு. க்ஷேமமாய் இருக்கார். ஏழுமலையானோட பொல்லாப்பு நமக்கு எதுக்கு?” என்று கூறியவாறு, பையிலிருந்து கொஞ்சம் துளசியும் ஏதோ பிரசாதமும் கொடுத்தார். சேட்டு நெத்தியிலயும் சேட்டம்மா நெத்தியிலயும் ஐயரே பெர்சனலா விபூதி ஈஷி விட்டார். “இப்ப நோக்கு உடம்பு பரவாயில்லையா? உடம்பப் பார்த்துண்றுங்கோ.”

சரின்னு இரண்டுபேரும் தலையாட்டினாங்க. “சரி, நான் கெளம்பறேன்,” என்று சொல்லி, “நாராயணம், சதுர்ப்புஜம், சசிவர்ணம்,” என்று ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டே கிளம்பிப் போய்ட்டாரு. ஒரு அரைமணி நேரம் கழிச்சி சேட்டம்மாவும் கிளம்பினாங்க. போகும்போது மஞ்சுகிட்ட சொன்னாங்க.

“மஞ்சுஜி, அறுபத் மூண் லட்சம் செக் போட் சேட்டுகிட்ட ‘கையேய்த்து’ வாங்கி, ‘அக்காராம் அண்டு துக்காராம் ஜுவல்லர்ஸ்க்கு’ உட்னே அன்ப்பிடு. மத்ததை மே பாத்கர்த்தியும்,” என்று உத்தரவு போட்டுவிட்டு, நடக்க முடியாமல், அடிப் பிரதர்ஷனம் மாதிரி, பொடிப் பொடி நடையாய் நடந்து, லிஃப்டுக்குள் தன்னை நுழைச்சிக்கிட்டாங்க.

மஞ்சுவின் பளபள முகம் கூட சோகத்தால அப்பளம் மாதிரி கோணல் மாணலாக் கிடந்துச்சு. பாக்கவே சகிக்கல. ‘க்ர்ர்ர்ர்க்’ அப்படீண்ணு, காலிங் பெல் அடிக்கவும் மஞ்சு, கொஞ்சமாக் கதவத் துறந்து உள்ளார போச்சி.

சேட்டு சொன்னார். “மஞ்சு. எப்படியாகிப்போச்சு பார்த்தியா, ஏன் எனக்கு மட்டும் இந்த ஒரு மாசமா இப்படி ஆகுது…” கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தாரு. பிறகு சேட்டு சொன்னாரு. “எனக்கு ரெண்டு நாள் ரெஸ்டு வேணும். கம்ப்ளீட் ரெஸ்ட். அதுவும் அமைதியான இடத்துல. நான் மட்டும் போறேன், வேற யாரும் வேண்டாம். இப்பவே கிளம்பறேன்.. அமைதியான இடமாப் பாத்து ரூம் புக் பண்ணிடு. நான் இப்பவே கிளம்பியாகணும்,” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.

மஞ்சு வெளியில் வந்து, தனது கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தாள். சேட்டுவின் விருப்பப்படியே, ஒரு இடத்தை கம்ப்யுட்டரில் வலைவீசி, தேடு தேடு என்று தேடிப் பிடித்த மஞ்சு, சேட்டுவின் பேர் சொல்லி இரண்டு நாளைக்கு பதிவு செய்துவிட்டு, சேட்டுவிடம் போய் சொல்லிடுச்சி.

டிரைவர் ஆறுமுகம் சும்மா ஏரோப்பிளான் பைலட் கணக்கா, வெள்ளைச் சொக்காயும், வெள்ளைப் பேண்டும், வெள்ளைத் தொப்பியும், பளபள ஷூவுமா, செமத்தியான கெட்டப்புல இருந்தான். ஆறுமுகம் ஒருத்தனின் ‘கெத்தே’ போதும், சொக்கலால் சேட்டுவின் கவுரவத்தை உலகம்பூரா எடுத்துச் சொல்ல. பின்னே? பென்சு கார் டிரைவராச்சே?!

ஹேஹேய்… அந்த பென்சு கார் டிரைவர் நாந்தான் சார். நானேதான். எல்லாத்தையும், எனுக்குன்னு போட்டு வச்சிருந்த ஸ்டூல் மேல குத்துக்கால் போட்டு உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தது நாந்தான்… ஆறுமுகம். டிரைவர் ஆறுமுகம்!

கொஞ்ச நேரத்தில், வெள்ளை நிற பென்சு காரும், சேட்டுவும் நானும் கிளம்பிப்போனோம். சேட்டுக்கு கொண்டாட்டமோ இல்லியோ, எனக்கு கொண்டாட்டந்தான்!! ஏன்னா இந்த மாதிரி நிறைய இடத்துக்கு சேட்டொடவோ இல்லைன்னா அவுங்க பேமிலியோடவோ அடிக்கடி போய்ட்டு வருவேன். என்னோட ட்ரைவிங்னா சேட்டுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கடற்கரைச்சாலை. குளுகுளு காற்றை பென்சு கார் அனுபவிக்க, காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு, ஏசியில் சேட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, தூங்கித் தூங்கி விழுந்தார். ஈ.சி.ஆர் ரோடு, பென்சு காரு… அடேய் ‘எட்டங்கிளாஸ் ஃபெயிலு’ ஆறுமுகம்….! போ… போ, போய்ட்டே இரு. எனது இரண்டு மணி நேர சுகமான பயணத்தில், மஞ்சு சொன்ன இருப்பிடம் வந்துச்சி.

கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு,”சேட்ஜி, சேட்ஜி,” என்று நான் என் சுண்டு விரல் நகத்தினால் சேட்ஜியின் சொட்டையில் பட்டும் படாமலும் சுரண்டினேன். கனாக்கண்டு எழுந்தமாதிரி, சொக்கலால் சடக்கென்று தலையை நிமிர்த்திப் பார்த்தார். பின்பு கீழே இறங்கினார். அதற்குள் ஒரு பெண் பூச்செண்டு கொண்டுவந்து சேட்டின் கையில் கொடுத்து, “வெல்கம் டு வில்லேஜ் ரிசார்ட், மிஸ்டர். சொக்கலால். எஞ்சாய் யுவர் ஹாலிடேய்ஸ்..” என்று ரெடிமேடான சிரிப்பு ஒன்றைச் சிரிச்சி வெச்சுது.

ஒரு அட்டெண்டர் வந்து காரின் முன்பக்கம் அமர்ந்துகொண்டார். “டிரைவர், வண்டியை எடுங்க. இங்கிருந்து பீச்சை ஒட்டினாப்புல ஒரு அரை கிலோமீட்டர் போகணும். அங்கதான் உங்க ஐயாவுக்கு புக் செய்த ‘மட் ஹவுஸ்’ இருக்கு என்று சொன்னார். சேட்டு திரும்பவும் காருக்குள் உட்கார, கார் மெல்ல நகர்ந்தது. அந்த ரிசார்ட்டுக்குள்ள இங்க ஒண்ணும் அங்க ஒண்ணுமா, தொலைவு தொலைவா, விதம் விதமா வீடுங்க இருந்துச்சி. நிறைய வெளி நாட்டு ஆணுங்களும் பொண்ணுங்களும் அவுங்க ஒடம்ப வெயிலில்ல காயப்போட்டுக்கிடிருந்தாங்க. அழகழகான தோட்டங்களுக்கு நடுவே மண்பாதை வளைஞ்சி வளைஞ்சி பென்சுக்கு வழிகாட்டிக்கொண்டே வந்துச்சி. எனக்கு, நான் ஏதோ சொர்கத்திலிருப்பதுபோல ஒரு ஃபீலிங்க் வந்தது. சிறிது நேரத்தில் அட்டெண்டர் வண்டியை நிப்பாடினாரு.

“வெல்கம் டு ஹெவன் ரிசார்ட்ஸ். திஸ் இஸ் யுவர் மட் ஹவுஸ்.” என்று பணிவுடன் சொல்லிவிட்டு, கார் கதவைத் திறந்தாரு. சுற்றிலும் மூங்கில் பத்தையால வேயப்பட்ட வேலி. வேலிக்கு உள்ளார போகிற இடத்துல ஒரு வாச்மேன் இருந்தாரு. அவரு தங்கிக்க ஒரு சிறிய காங்கிரீட் கட்டிடம். அதுக்குப் பக்கத்துல கார் டிரைவர் தக்கிக்க ஒரு ரூம். டிரைவர் ரூம்ல, டிவி, ப்ரிஜ்ஜி எல்லாம் இருந்துச்சி. காரை நிப்பாட்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டு. காரை அங்க நிப்பாட்டிட்டு, அட்டெண்டர் எங்களை அந்த குடிசை நோக்கி கூட்டிக்கிட்டுப்போனார்.

இப்போ புரியுது, ‘மட் ஹவுஸ்’ அப்படீன்னா என்னன்னு. நட்ட நடுவுல ஒரு மண் குடிசை. கோரையால வேய்ஞ்ச கூரை. ரொம்பவும் மக்கிப்போயிருந்தது. குடிசைய வட்டவடிவில் களிமண்ணால கட்டியிருந்தாங்க. மூங்கிதட்டிதான் அதுக்கு கதவு. ரெண்டு குட்டி சைஸ் ஜன்னலுக்கு அரிசி கோணிப் பைய தச்சி, சீலையா தொங்க விட்டுருந்தாங்க. ஒரு பழைய மர நாக்காலியும் ஒரு மேசையும், அந்த மேசைமேல ஒரு லாந்தர் விளக்கும், ஒரு இன்டர்காமும் இருந்துச்சி. குடிசைக்குள்ளாற ஒரு நார் கட்டில். நல்லவேளையா அதுமேல மெத்துன்னு ஒரு மெத்தயும் தலவாணியும். போத்திக்க ஒரு கம்பிளி. கரண்டு, டிவி, ப்ரிஜ்ஜி, அடுப்பு எதுவும் காணும். குடிசைக்கு பின்னால சுத்தி பனை ஓலை கட்டி ஒரு சிறிய பாத்ரூம் டாய்லெட்டு.

குடிசையச் சுத்தி ஏகாந்தமா ஒரே பூந்தோட்டம், புல்வெளி, வாழ மரம், தென்ன மரம், பன மரம் அப்படீன்னு நெறைய இருந்துச்சி. நடு நடுவுல ஒத்தையடிப் பாதை ஒண்ணு வளைஞ்சு வளைஞ்சு சுத்தி வந்துது. பாக்கறதுக்கு அழகாத்தான் இருந்துது. ஆனா கரண்டு இல்லாம எப்புடி? நம்ம சேட்டுதான் வித்தியாசமா விரும்புற ஆளாச்சே.

தொபுகடீர்னு சேட்டு கட்டில்மேல உகார்ந்தாரு. அவரை விட்டுவிட்டு நாங்க வெளியில வந்துட்டோம். நான் காருக்குப் பக்கதிலிருந்த என் ரூமுக்கு போனேன். நல்லா வசதியா இருந்துச்சி. பேச்சுத்துணைக்கு வாச்மேன் இருந்தாரு.

“வாச்மேன் அண்ணே, என்ன கொடுமை பாத்தீங்களா? எவ்ளோ பெரிய பணக்காரன் இந்த சேட்டு, இந்த மண்ணு குடிசைல குந்திக்க ஆசப்படறான். என்னத்தச் சொல்ல?” என்று சலிச்சிக்கிட்டேன் நான்.

“ஒரு ராத் தங்க இருபதாயிரம் தம்பி. நம்புவியா? அது மட்டுமில்ல. இந்த குடிசைய புக் பண்ணி தங்கறவுங்களுக்கு எல்லாமே கிராமத்து டைப் சமையல், சாப்பாடு. பின்னால இருக்கிற சோலார் வாட்டர் ஹீட்டர் வழியா சுடுதண்ணி, பாத்ரூம்ல இருக்கிற பித்தள அண்டாவுக்கு வந்துடும். மொண்டு மொண்டு ஊத்தி குளிக்கணும். இந்த மாதிரி வீடுங்களுக்கு பேரு ‘எக்கோ ஸ்டைலு ரிசார்ட்டு.’ ஏதோ இயற்கை அது இது அப்படீன்றாங்க. ங்கொய்யால, ஒண்ணுமே இல்லாததுக்கு ரேட்டு போட்டு தீட்டிருவானுவ. ஃபைவ் ஸ்டார் ஓட்டலாச்சே!” வாட்ச்மேன் விவரம் சொன்னாரு.

“சாப்பாட்டு மெனுவை கேட்டின்னா, கெக்கேபிக்கேன்னு சிரிப்ப. காலம்பர சுக்கு காப்பி. அப்புறம் இட்டிலி, ஆப்பம். பதினோரு மணிக்கு ஒரு ஜோடுதலை நெறைய கம்பங்கூழு. மதியானம், கேழ்வரகு களி, கொஞ்சம் சோறு, மொச்கக்கொட்டை போட்ட கருவாட்டுக் குழம்பு. சாயுங்காலம் கொழுக்கட்டையும், சுக்குக் காப்பியும். ராத்திரிக்கு நாட்டுக்கோழி கறிக்குழம்பு. ஆனா செம டேஸ்ட்டா இருக்கும். எல்லாத்தையும் ஒரு காரைக்குடி ஆச்சிதான் செய்யுது, அதுக்கு சம்பளம் நாப்பதாயிரம் ரூவா.”

எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. சிரிப்பும் தாங்கிக்க முடியலை.

“அட தம்பீ, இன்னும் இருக்கு கேளு… நல்லெண்ணையை தும்பைப்பூ போட்டு காய்ச்சி எடுத்துக்கிட்டு, ஒரு கரடு முரடான ஆளு வந்து மசாஜ் செய்ஞ்சி விடுவான். சும்மா, செத்த பொணத்த கொளுத்தும்போது, வெட்டியான் ஓங்கி ஓங்கி அடிப்பாம்பாரு, அதுமாதிரி சொத்து பொத்துன்னு மொத்தி எடுத்துடுவான். இதுக்கு பேருதாம்பா ஸ்பா.” என்று சிரிப்பை அடக்க முடியாம சொல்லி முடிச்சாரு.

“வாச்மேன் அண்ணே, திருத்தணி பக்கத்துல மலைப்பாக்கம் அப்படீன்ற ஊருல எங்க தாத்தா இருக்காரு. எவ்வளவு கூப்பிட்டும் பட்டணத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. இங்க பாக்குறீங்க பாருங்க… இதே கெட்டப்புலதான் எங்க தாத்தா குடிசைபோட்டு, ஆடு மேய்ச்சி வாழ்ந்துகிட்டிருக்காரு. அதே கூழு, களி, சோறுதான் திங்கிறாரு. அது கஷ்டமான வாழ்க்கை. இங்க சொகுசான வாழ்க்கை. என்னணே உலகம் இது… த்தூ…” என்று சொல்லி நான் சலித்துக் கொண்டேன். “ஒரு இன்கிரிமெண்ட் போட்றதுக்கு பத்து தடவ யோசிப்பாண்ணே இந்த சேட்டு…!.”

ஆடு, கோழி, மீனு, நண்டுன்னு என்னோட மெனு ஐட்டங்க ரெண்டு நாளா சும்மா ஜமாய்ச்சுது. நால்லா சாப்பிட வேண்டியது. சுத்திப்பாக்கவேண்டியது, கடல்ல குளிக்க வேண்டியது, தூங்க வேண்டியதுன்னு, போதாக்குறைக்கு வாச்சுமேன் அண்ணனின் சளைக்காத பேச்சு வேற. எனக்கு ரெண்டு நாள் போனதே தெரியலை.

ரெண்டாம் நாள் திரும்பிப் போக நானும் சேட்டுவும் தயாரானோம். என் கையில் கிரெடிட் கார்டு கொடுத்து பில்லை செட்டில் பண்ணச் சொல்லி இருந்தார். பில்லைப் படித்துக்கொண்டே மெயின் கேட்டில் இருக்கும் ரிசப்ஷன் ஆபீசுக்கு போனேன். நாப்பத்தி எட்டாயிரத்துச் சில்லரைக்கு பில். அட தேவுடா, ஒரு கப் கம்பங்கூழ் நானூத்து அம்பது ரூபாய். சுக்குக் காப்பி நூத்தி எண்பது. கொழுக்கட்டை அறுனூத்திப் பத்து. கறிச் சாப்பாடு ஆயிரத்து சொச்சம். நல்லெண்ணைக் குளியலுக்கு ஏழாயிரத்து நானூறு. பிளஸ் டேக்ஸ். எனக்கு பெருமூச்சு வந்தது.

அடேய் ஏழுமலையானே, ஏண்டா இந்த வித்தியாசம்?

சேட்டு காரில் ஏறி உட்கார்ந்து இருந்தாரு. “ஆறுமுகம்… ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா. நல்லா ரிலாக்ஸ் பண்ணினேன். நாம கட்டின பில்லுக்கு இது ரொம்ப வொர்த்.” என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். “நீ என்னடா டல்லா இருக்க? நாளைக்கும் தயாரா இரு ஆறுமுகம். அக்காராம் அண்டு துக்காராம்ல இருந்து போன் வந்துது. வைர மாலை ரெடியாயிடுத்தாம். திருப்பதி போகணும்.”

“சரி சேட்டு.” என்று அவரோட உற்சாகமான முகத்தப் பார்த்து, அவருக்கு செயற்கையாக சிரித்து பதில் சொன்னேன்.

வரும்போது எனக்கு இருந்த உற்சாகம், திரும்பிப் போகும்போது காணவில்லை!

இ.சி.ஆர். ரோடுல, பென்ஸ் கார் ஏனோ கொஞ்சம்கூட சத்தமே இல்லாம மௌனமா போய்கிட்டே இருந்துச்சி. அந்த மௌனம் என்னோட கனத்த மனசுக்கு சப்போர்ட் பண்ணினாப்புல இருந்துச்சு. என்னைப்போல, அதுவும் ஒரு இயந்திரம்தானே?!